Pushpa 2

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 20 வயது இளம் இசையமைப்பாளர்: முழு விவரம்

முறையான பயிற்சியும், அயராத முயற்சியும் இருந்தால், எட்டுத்திசையும் வசப்படும் தானே. அதுபோல, இதோ சாதனை படைத்த இசையமைப்பாளரை பார்ப்போம், வாங்க..

தமிழ் சினிமாவில், பின்னணி பாடகர்களான திப்பு- ஹரிணியின் மகன் சாய் அபயங்கர்.
இவர், தற்போது மிகப்பெரிய கவனத்தை கோலிவுட்டில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் பெற்றுள்ளார்.

20 வயதேயான சாய் அபயங்கர் அடுத்தடுத்து ‘சூர்யா-45’ மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இவர் வெளியிட்ட ‘கட்சி சேர’ பாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. இந்த பாடல் youtubeல் மட்டுமே 193 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

இதையடுத்து, ‘ஆசை தீர’ என்ற பாடலையும் வெளியிட்டார் சாய் அபயங்கர். இந்த பாடலும் மாஸ் ஹிட்தான். இந்த பாடல்கள் சர்வதேச அளவில் இவரது ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியுள்ளது.

இந்நிலையில், சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் இந்த ஆண்டின் அதிகமாக தேடப்பட்ட பாடல்கள் வரிசையில்-சர்வதேச அளவில், முதல் 10 இடத்தில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து, கூகுள் தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் மூலம் டெய்லர் ஷிப்ட், சாப்ரினா கார்பென்டர் இசைக் கலைஞர்களுடன் சாய் அபயங்கரை இணைத்துள்ளது.

சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பாடலாகவும் சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. 20 வயதிலேயே இந்த பெருமையை பெற்றுள்ளார் சாய் அபயங்கர்.

இளம் வயதிலேயே இசையமைப்பாளர்களாக களமிறங்கி உலகப்புகழ் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் வரிசையில் சாய் அபயங்கரும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம், இசையால் வசமாகா இதயமெது? என்பதை இளம் வயதிலேயே உலகுக்கு நிரூபித்து விட்டார் சாய்.!