தங்கக்கடத்தல் வழக்கில், நடிகை ரன்யாராவ் ஒப்புதல்: கோர்ட் தீர்ப்பு என்ன?
தங்கக்கடத்தலுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தியதாக ரன்யாராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றிய தகவல்கள்..
துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தங்கம் வாங்க ஹவாலா மூலம் பணம் அனுப்பியதை ஒப்புக்கொண்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, நடிகை ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், நகரத்தின் 64-வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் (மார்ச் 27-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, டிஆர்ஐ வழக்கறிஞர் வாதிடுகையில், ரன்யா ராவ் சட்டவிரோதமாக தங்கம் கடத்தியது ஜாமீன் வழங்க முடியாத ஒரு தீவிர குற்றமாகும். இந்த வழக்கில் தங்கம் கடத்தல் குற்றம் மட்டும் நடக்கவில்லை. தங்கம் வாங்குவதற்கு தேவையான பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பியதாக ரன்யாவே விசாரணையில் ஒப்புக்கொண்டார் என்று கூறினார்.
ரன்யா ராவ் துபாயிலிருந்து தங்கத்துடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 6:30 மணிக்கு வந்தபோது, டிஆர்ஐ அதிகாரிகள் அவரை சோதனை செய்ததில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.சோதனையின்போது, டிஆர்ஐ அதிகாரிகள் சட்டப்படியான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றினர்.
சுங்கச் சட்டத்தின் பிரிவு 123-ன் படி, எந்தவொரு சரக்கையும் சட்ட விரோதமாக கடத்த முயற்சி செய்தால் மற்றும் குற்றத்திற்கான நம்பகமான ஆரம்ப ஆதாரங்கள் இருந்தால் ஜாமீன் வழங்கக்கூடாது.
மாலை 6:30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1:30 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு ரன்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, ஆரம்ப விசாரணை நடத்தி தகவல் பெறப்பட்டது என்று தெரிவித்தனர்.
மேலும், ரன்யா தங்கம் கடத்தியது ஆரம்ப விசாரணையில் உறுதி செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டார். கைதுக்கான காரணத்தை குறிப்பிட்டு கைது அறிக்கை வழங்கப்பட்டது.
எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. ரன்யா ராவ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ரன்யாவின் விசாரணை மற்றும் கைது நடவடிக்கையில் டிஆர்ஐ அதிகாரிகள் சுங்கச் சட்ட விதிகளை மீறி உள்ளனர்.
எனவே, ரன்யாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், விசாரணையை முடித்து மார்ச் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ஒத்திவைத்தது.
