வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்

‘அந்த 25 நிமிடங்கள் போதும்’ என வெற்றிமாறனிடம் நான் சொன்னேன் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக கொண்டு, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்ற படத்தை உருவாக்குகிறார். இக்கதை செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலாகும்.
ஒரு நாவலை, முன்னணி நடிகரின் நடிப்பில், பண்பாடு கெடாமல் பொருளாதார சரிவு விழாமல் திரைக்கதையாக மாற்றுவதென்பதே சாதனைதான்.
இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால், உடனே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியதாக ஜி.வி.பிரகாஷ்குமார் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவிக்கையில், ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும். ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றிமாறன் 25 நிமிடங்கள் கதை சொன்னார்.
‘இந்த 25 நிமிடங்கள் போதும், பார்வையாளர்களை கவர்ந்திழுக்க’ என்று நான் அவரிடம் சொன்னேன். அந்த அளவிற்கு அற்புதம்’ என்றார்.
இன்றைய திரைச்சூழலில் ‘வாடிவாசல்’ படம் எத்தனை பாகங்களாக எடுக்கப்படுகிறதோ, எந்த பாகம் முதலில் வருமோ எனவும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.