இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்: இன்று திரைப் பிரமுகர்கள் அஞ்சலி..

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயமுருகன் மரணமடைந்தார். அவரது உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகன் முத்துச்சாமிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜெயமுருகன், முதலில் தயாரித்த படம் சிந்து பாத். கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கத்தில் மன்சூர் அலிகான் லீடு ரோலில் நடித்து வெளியானது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கஸ்தூரி நடித்தார்.
மேலும், சங்கவி, செந்தில், ஆர். சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், இயக்குனராக களமிறங்கினார்.
இவர் இயக்கிய முதல்படம் ‘ரோஜா மலரே’. முரளி, அருண்பாண்டியன், ஆனந்த்பாபு, ரீவா ஆகியோர் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து புருஷன் எனக்கு அரசன், தீ இவன், அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கினார். இதில், நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்த ‘தீ இவன்’ படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. மற்ற படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை.
மேலும், அடடா என்ன அழகு மற்றும் தீ இவன் படங்களுக்கு டி.எம்.ஜெயமுருகனே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வந்த ஜெயமுருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
அவரின் உடல் இன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இவருக்கு தங்களின் இரங்கல்களை வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். ஆழ்ந்த இரங்கல்கள்..
