
மகனை காப்பாற்ற போராடும் தாயின் பாச போராட்டமாக வெளியாகியுள்ள ஆக்ஸிஜன் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆக்சிசன்.

படத்தின் கதைக்களம் : இளம் வயதிலேயே கணவனை இழந்த விதவை பெண்ணாக இருந்து வருகிறார் நயன்தாரா. இவருடைய ஒரே மகன் தான் ரித்விக். இவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பதால் ஆக்சிஜன் சிலிண்டர் மூலமாகத்தான் சுவாசித்து வருகிறார். இதற்காக ஒரு ஆபரேஷன் செய்வதற்காக நயன்தாரா தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூரிலிருந்து ஆம்னி பேருந்து மூலமாக கொச்சிக்கு செல்கிறார். செல்லும் வழியில் திடீரென கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து விபத்தில் சிக்கிக் கொள்ள பேருந்தில் இருப்பவர்களுக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
இதனால் ரித்விக்கிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்றி அதன்மூலம் சுவாசிக்க முயற்சி செய்கின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என்றால் தனது மகனால் சுவாசிக்க முடியாது என்பதால் தன்னுடைய மகனை காப்பாற்ற போராடுகிறான் நயன்தாரா. இந்த போராட்டத்துக்கு இடையே என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதைக்களம்.
தாய், மகன், பாசம் என படத்தின் மையக் கருவை அழகாக தேர்வு செய்துள்ளார் அறிமுக இயக்குனர் விக்னேஷ். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்ட தவறிவிட்டார். மிகப்பெரிய நடிகையான நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

நயன்தாரா அவருடைய பங்கிற்கு அவருடைய கதாபாத்திரத்தை நல்லபடியாக நடித்துக் கொடுத்துள்ளார். யூட்யூபில் கலக்கிக் கொண்டிருந்த ரித்விக் இந்த படத்தில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இருந்தாலும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு இன்னும் வலு சேர்க்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு பேருந்தையும் செட்டாக மாற்றி படம் முழுவதையும் எடுத்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழு பேருந்தில் சிக்கி இருக்கும் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற கோணத்தில் கூட படத்தை எடுத்திருக்கலாம். ஆனா அதையெல்லாம் போற போக்கில் காட்டிவிட்டு பல காட்சிகள் தவறுகளோடு படத்தை முடித்துள்ளார் இயக்குனர்.