இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆஸ்பத்திரியில் அனுமதி..
படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரன் மயங்கி விழுந்ததால், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:
சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார்.
நடிகர் பிரபு நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கோயில் காளை, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு (அண்ணன்) இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கங்கை அமரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நடித்து வந்த திரைப்படம், சிவகங்கை அருகே படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கங்கை அமரன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை தொடர்ந்து படக்குழுவினர் மதுரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், கங்கை அமரனுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து எதுவும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக ரசிகர்கள் பலர், கங்கை அமரன் விரைவில் உடல்நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கங்கை அமரனின் மூத்த மகன் இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் நடித்த ‘கோட்’ படத்தை தொடர்ந்து, ‘பார்ட்டி’ படம் ரிலீஸாக உள்ளது. இளைய மகனான பிரேம்ஜி, திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.