‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கும்பமேளா வந்த மோனாலிசா தற்போது பிஸியாகி வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்..
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த மோனலிசா போன்ஸ்லே எனும் 16 வயது பெண் கும்பமேளாவில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்று வந்தார். அவரின் வசீகரிக்கும் கண்களை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி விட்டது.
யார் இந்த பிரவுன் பியூட்டி, யார் இந்த காந்தக்கண்ணழகி என ஆளாளுக்கு மோனலிசா பற்றி பேசத் துவங்கி விட்டார்கள். கும்பமேளாவுக்கு சென்ற இளைஞர்கள் பலர் மோனலிசாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
மோனலிசாவின் வீடியோ வைரலான பிறகு அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார். பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இந்தூருக்கு சென்று மோனலிசாவை பார்த்து தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
அந்த படத்திற்கு ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 12-ம் தேதி டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் பகுதியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டார்கள். ஆனால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி துவங்க முடியவில்லை.
முதல் படத்திற்காக மோனலிசாவுக்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், மோனலிசாவை தேடி விளம்பர பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க மோனலிசாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதற்காக அவருக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். முதல் பட வேலையே துவங்காத நிலையில் மோனலிசா ரூ.15 லட்சம் சம்பளத்தில் விளம்பர படத்தில் நடிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தன் வாழ்க்கை மாறிப் போனது குறித்து மோனலிசா கூறியதாவது, ‘மாலை விற்க கும்பமேளாவுக்கு சென்றேன். ஆனால், விதி வேறு மாதிரி பிளான் வைத்திருக்கிறது. கடவுள் அருளால் நான் பிரபலமாகி விட்டேன். உங்கள் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதனால், எனக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என் வீடு தேடி வந்து வாய்ப்பு கொடுத்தார்.
ஹீரோயின் ஆக வேண்டும் என நான் கனவு கண்டது உண்டு. அந்த கனவு இன்று நிறைவேறி விட்டது. இந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன்’ என்றார்.