12 ஆண்டுகளுக்கு பிறகு, தடைகளை தாண்டி சுந்தர்.சி இயக்கிய ‘மத கஜ ராஜா’ ரிலீஸ்..
12 ஆண்டுகளுக்கு முன் விஷால் நடித்த படம், தற்போது தான் ரிலீஸாக உள்ளது. இது குறித்த விவரம் காண்போம்..
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ தயாரிப்பு நிர்வாகப் பிரச்சினையால், பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக பொங்கல் வெளியீட்டில் களமிறங்கிய படங்களில், விஷாலின் ‘மத கஜ ராஜா’ படமும் ஒன்று. இப்படம், கடந்த 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருந்தது.
‘மத கஜ ராஜா’ படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் 2013-ல் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. விஜய்யின் ‘நண்பன்’ படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்தது.
பின்னர், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தை தயாரித்ததன் மூலம் நஷ்டத்தை சந்தித்து, மீள முடியாததால் அதன் பின் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
‘மத கஜ ராஜா’ படத்தின் ரிலீஸ் சிக்கலுக்கு ‘கடல்’ படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டமும் காரணமாக கூறப்படுகிறது.
‘மத கஜ ராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் 15 முதல் 16 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அன்றைய காலச் சூழலில் அது பெரிய தொகை என்பதால், அப்படத்தை கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தற்போது அந்த தொகை ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமையை விற்றாலே கிடைத்து விடும் என்கிற நிலைமை உள்ளது.
அதுமட்டுமின்றி, மார்க்கெட்டும் விரிவடைந்துள்ளதால் இந்த படத்தை வெளியிடும் பொறுப்பை திருப்பூர் சுப்ரமணியம் ஏற்றிருக்கிறார். யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ, அவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு, கொடுக்க வேண்டிய பணத்தில் பாதியை தற்போது தருவதாக டீல் பேசி சம்மதம் வாங்கி, இதனால் 8 கோடி ரூபாய் இருந்தாலே படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து, அதற்கான பொறுப்பையும் ஏற்றிருகிறார்.
பின்னர், சரியான ரிலீஸ் தேதி கிடைத்தால் வெளியிட்டு விடலாம் என்கிற திட்டத்தில் இருந்த அவர்களுக்கு ‘விடாமுயற்சி’ படம் விலகியதும், இதைவிட சரியான தேதி கிடைக்காது என முடிவெடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்கிறார்கள்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.