ஹீரோவாக ஒரு பக்கம், ‘கைதி-2’ இயக்கம் மறுபக்கம்: லோகேஷ் பிஸி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் இரத்தம் வழியும் முகத்துடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்துக்கு ‘DC’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தின் ஷுட்டிங் துவங்கி நடந்து வரும் நிலையில், தனது இயக்கத்தில் உருவாகும் 7-வது படப் பணிகளையும் தொடங்கியிருக்கிறார் லோகேஷ். அதாவது, தன்னுடைய 7-வது படத்துக்கான பணிகள் தொடர்பாக, தன் உதவியாளர்களுடன் அவர் இருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்றை லோகேஷின் துணை இயக்குநர் பகிர்ந்துள்ளார். LK 7 எனவும் இதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதனால், லோகேஷ் அடுத்ததாக இயக்கவுள்ள படத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படம் நீண்ட காலமாக அவரது இயக்கத்தில் உருவாவதாக இருந்த கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கைதி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் ஹீரோயின், பாடல்கள் இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களாக பரபரப்பான கதைக்களத்துடன் ‘கைதி’ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் படக்குழுவை மகிழ்வித்தது. அத்துடன், 2-வது பாகத்துக்கான லீட் உடன் ‘கைதி’ படம் முடிக்கப்பட்டிருந்தது.
லோகேஷின் அடுத்தடுத்த கமிட்மென்ட்கள் காரணமாக, இப்படம் தள்ளிக்போய் தற்போது இதன் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
