கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே நடித்த அக்கா வெப் தொடரின் டீசர் வெளியானது!

Web Ads

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அக்கா’ (Akka) வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. அதிகாரம், பாரம்பரியம், விசுவாசம் மற்றும் பழிவாங்குதலை மையமாகக் கொண்ட இந்த கேங்ஸ்டர் கதையை தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் கற்பனையான அரசாட்சியான பெர்னூருவை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாகத் தங்களது அதிகாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் பெண்களின் உலகில், புதிய சவால்கள் உருவாகும்போது அதிகாரப் போட்டியும் பழிவாங்கும் உணர்வும் தீவிரமடைகின்றன. இதனால் நீண்டகாலமாக நிலவி வரும் அதிகார அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இத்தொடரில் பவானி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளனர். இருவரின் வெவ்வேறு லட்சியங்களும் கொள்கைகளும் அவர்களுக்கிடையே கடுமையான மோதலை உருவாக்குகின்றன. இந்த மோதல் பெர்னூருவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

மேலும், தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்தொடர் குறித்து நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் தொடர் பிரிவுத் தலைவர் தன்யா பாமி கூறுகையில், “பார்வையாளர்களின் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவதில் நெட்ஃபிளிக்ஸ் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. ‘அக்கா’ தொடரின் மூலம் பார்வையாளர்கள் பெர்னூரு என்ற கற்பனை உலகத்திற்குள் பயணிக்க உள்ளனர். இங்கு பெண்கள் கதையின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், அதிகாரத்தின் மையங்களாகவும் திகழ்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ஆதித்யா சோப்ராவின் கற்பனையில் உருவான இந்தத் தொடர், யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனான எங்களது கூட்டணியில் மற்றொரு முக்கியப் படைப்பாக அமைந்துள்ளது” என்றார்.

தொடரின் எழுத்தாளரும் இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி கூறுகையில், “வழக்கமான கேங்ஸ்டர் கதைகளிலிருந்து மாறுபட்ட, தனித்துவமான விதிகளைக் கொண்ட ஓர் உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே ‘அக்கா’ கதையை உருவாக்கத் தூண்டியது. பல தலைமுறைகளாகப் பெண்களால் வடிவமைக்கப்பட்ட பெர்னூருவில் அதிகாரம், பாரம்பரியம், பகைமை ஆகியவை எதிர்பாராத விதங்களில் வெளிப்படுகின்றன.

Web Ad 2

கீர்த்தி சுரேஷும் ராதிகா ஆப்தேவும் பவானி, ருத்ரா கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தக் கதையின் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்க ஆதரவளித்த ஆதித்யா சோப்ரா, அக்ஷய் விதானி, யோகேந்திர மோக்ரே மற்றும் யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் குழுவினருக்கும், இந்தப் படைப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி” என்றார்.

பவானி கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “தான் எதை ஆதரிக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கும் பெண் பவானி. தனது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாக்க எதையும் செய்யத் துணிவாள். அவளது வலிமைக்கும் அதிகாரத்துக்கும் பின்னால் இருக்கும் முடிவுகள் எதுவும் எளிதானவை அல்ல. அதுவே அந்தக் கதாபாத்திரத்தைச் சுவாரசியமானதாக மாற்றுகிறது.

ராதிகா ஆப்தேவுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம். பவானியும் ருத்ராவும் முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்களுக்கிடையேயான உறவும் மோதலும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தும். பவானியின் பல்வேறு பரிமாணங்களைப் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

ருத்ரா கதாபாத்திரம் குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், “தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் தன்னை வரையறுத்துக்கொள்ள அனுமதிக்காத துணிச்சலும் லட்சியமும் கொண்ட பெண் ருத்ரா. ஏற்கெனவே நிலவி வரும் அதிகார அமைப்புக்குச் சவால் விடவும் அவள் தயங்கமாட்டாள்.

இந்தத் தொடரில் என்னைக் கவர்ந்த அம்சம், மோதல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல என்பதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வழிநடத்தும் கொள்கைகள், விசுவாசங்கள் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கீர்த்தியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். பார்வையாளர்கள் இந்தத் தொடரை எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

‘தி ரொமான்டிக்ஸ்’, ‘தி ரயில்வே மென்’, ‘மஹாராஜ்’, ‘மண்டலா மர்டர்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கியுள்ள மற்றொரு தொடராக ‘அக்கா’ வெளியாகவுள்ளது. அதிகாரப் போட்டி, குடும்ப உறவுகள் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இத்தொடரின் டிரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.