கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’ பட டைட்டில் லுக் வெளியானது

Web Ads

கண்ணன் ரவி குழுமம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாராகும் புதிய திரைப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில் ரத்தம் தோய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள், கரிசல் மண் மற்றும் புழுதி எனப் படத்தின் தலைப்புக்கு ஏற்ற வகையில் அதிரடியான தோற்றம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கரிசல் காட்டின் மண்ணில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வளையலை நோக்கி, ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து தாக்குகிறது. அதில் வளையல் உடைந்து சிதற, அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற படத்தின் தலைப்பு அதிரடியாக வெளிப்படுகிறது. மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் காணப்படும் கால்தடங்கள் மற்றும் செருப்புத் தடங்கள் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன.

Web Ad 2

இப்படத்திற்கு கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். தமிழ் அரசன் படத்தொகுப்புப் பணிகளையும், ஸ்ரீநாத் விஸ்வநாதன் ஹெட் ஆஃப் ஆபரேஷன்ஸ் பொறுப்பையும் கவனிக்கின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகவும், மோனிக் போஸ்டர் வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

கோவில்பட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் ‘செங்குலம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.