இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. இதற்கு முன்பு மணிரத்னம் – லைகா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி, காதல் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களிடையே தனி அடையாளத்தைப் பெற்றவர் இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படமும் கவனம் ஈர்த்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சப்த சாகரதாச்சே எல்லோ – சைடு பி’, ‘மீசைய முறுக்கு 2’, ‘3BHK’, ‘ரூம் நம்பர் 418’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்துள்ள இவர், இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பிட் டிராக் பாடலுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோவில் கொல்கத்தாவின் அழகும், படத்தின் தனித்துவமான காட்சியமைப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் இசை ஆல்பம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடு, இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளைப் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் கதைக்களத்தில் மணிரத்னம் மீண்டும் களமிறங்கியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027 ஜனவரி 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
