
Kalappai Makkal Iyakkam :
டெல்டா மக்களுக்காக பி.டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் மீண்டும் உதவியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகரும் பாடகருமான ஜி.வி.பிரகாஷும் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பி.டி செல்வகுமார். இவர் இயக்கி வரும் கலப்பை மக்கள் இயக்கம் தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகைப்பட்டினம், தஞ்சாவூர், வேதாரண்யம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதனால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்காக திரையுலக பிரபலங்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.
இவர்களை போலவே தயாரிப்பாளர் பி.டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்குமும் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
சமீபத்தில் கூட சென்னையில் இருந்து பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை டெல்டா மாவட்ட மக்களுக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிவாரண உதவிகளை தொடர்ந்து மீண்டும் கலப்பை மக்கள் இயக்கம் சுமார் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் அதிகமான மக்களுக்கு பசு மாட்டு கன்றுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவி உள்ளனர்.
பிரபல நடிகரும் பாடகருமான ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பசு மாட்டு கன்றுகளை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 5 ஸ்டார் செந்தில், திரைப்பட விநியோகிஸ்தர் செல்வவேல், கிறிஸ்டோபர் பாலாஜி, சமூக ஆர்வலர் வி.கே.வெங்கடேசன், திரைப்பட தயாரிப்பாளர் அலெஸ், பட்டு கோட்டை அருண் தியேட்டர் உரிமையாளர் யோகராஜ், கலப்பை மக்கள் இயக்க மாநில செயலாளர் ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், தயாரிப்பு நிர்வாகி இளையராஜா ஆகியோர்களுக்கு கலந்து கொண்டு உதவியுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது,
அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்ப்பதை விட தனி மனிதர்களும் இணைந்து உதவினால் மட்டும் தான் இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டும் வர முடியும். இளைஞர்கள் பலரும் உதவ முன்வர வேண்டும்.
குறுகிய கால சாகுபடிக்கு வேண்டிய உதவிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை எப்படி விற்பனை செய்யலாம் என்பது குறித்து பற்றியும் பேசியுள்ளார்.
வெறும் நிவாரண பொருட்களால் மட்டும் மக்களை பாதிப்பில் இருந்து மீட்டு விட முடியாது என்பதாலும் அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக தான் இந்த பசுங்கன்றுகளை வழங்கியுள்ளோம் எனவும் பேசியுள்ளார்.
திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுகிறார்கள் என நம்புகிறேன், நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
மத்திய மாநில அரசுகள் இன்னும் அதிகமான அளவில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தன்னுடைய உரையை முடித்துள்ளார்.
கலப்பை மக்கள் இயக்கத்தின் இந்த முயற்சியை அம்மாவட்ட கலெக்டர், கிராமப்புற பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.