
ரஜினியின் ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் தற்கொலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்டதன் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி, கோவாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கி இருந்த கே.பி.சவுத்ரி, உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில் தங்கியிருந்த கே.பி. செளத்ரி நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.
ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட செளத்ரி, பின்னர் சர்தார், கப்பர் சிங், சீதம்மா வக்கிட்லோ, சிரிமல்லே சேட்டு போன்ற படங்களை விநியோகம் செய்தார். இதுதவிர, சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.
இச்சூழலில், ரியல் எஸ்டேட்டில் நிறைய இழப்புகளைச் சந்தித்த அவர், பின்னர் கோவாவுக்கு சென்று அங்கு பப் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், அந்த தொழிலும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. சட்டவிரோதமாக கட்டியதாக கூறி கோவா அரசு அவருக்கு சொந்தமான பப்பை இடித்தது.
மேலும் கோவாவுக்கு வரும் திரைப் பிரபலங்களுக்கு அவர் ரகசியமாக போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
திரைப்படங்கள் மற்றும் பப்பினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவர் போதைப்பொருள் தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர் போதைப்பொருள் சப்ளை செய்த குற்றத்திற்காக கே.பி. சவுத்ரி கைது செய்யப்பட்டார். அவர் மீதான போதைப்பொருள் வழக்கு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த கே.பி.செளத்ரி கோவாவில் வசித்து வந்தார். மேலும், கடுமையான நிதி சிக்கல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர், திடீரென தற்கொலை செய்துள்ளார். அவது தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன? என தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.