பிரதர் படத்திற்காக, ஜெயம் ரவி செய்த சம்பளக் குறைப்பு: படக்குழு நெகிழ்ச்சி
முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பிரதர் படத்திற்காக, பெரிய அளவில் சம்பளக் குறைப்பு செய்து படம் வெளியாக உதவியிருக்கிறார் என்ற புதிய தகவலை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்த விவரம் பார்ப்போம்..
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால், சமீபகாலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவிற்கு ஓடவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதன்மையான ரோலில் நடித்த ஜெயம் ரவி அப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.
ஆனால், அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான இறைவன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால், உடனடியாக ஒரு வெற்றிப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் ஜெயம் ரவி. அந்த வகையில் பிரதர் திரைப்படத்தை அவர் மிகவும் நம்பியிருந்தார்.
கண்டிப்பாக இப்படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என நம்பியிருந்த ஜெயம் ரவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரதர் திரைப்படம் நினைத்தவாறு விமர்சனங்களை பெறவில்லை. வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
மேலும், இப்படத்திற்காக ஜெயம் ரவி மிகப்பெரிய தியாகத்தையும் செய்திருக்கின்றார். அதாவது பிரதர் திரைப்படம் வெளியாவதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால், படம் வெளியாவதே சிக்கலாக இருந்ததாம். படக்குழு என்ன செய்வது என தெரியாமல் இருந்த நிலையில் ஜெயம் ரவி தானாக முன்வந்து இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவியுள்ளார்.
கடைசி நேரத்தில், நான்கு கோடி இருந்தால் தான் இப்படம் வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டபோது, ஜெயம் ரவி தன் சம்பளத்தில் இருந்து நான்கு கோடியை விட்டுக்கொடுத்து இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவியுள்ளார். அவர் கடைசி நேரத்தில் செய்த உதவியால் தான் பிரதர் திரைப்படம் சொன்னபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானதாம். இல்லையென்றால், பிரதர் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாக வாய்ப்பே இல்லை என்றே தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், ஜெயம் ரவிக்காக இப்படம் வெற்றி பெற்றிருக்கலாம் என கூறி வருகின்றனர்.
இருப்பினும், ஜெயம் ரவியின் இந்த மனசிற்காகவே அவரின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.