Ind vs Aus 1st T20
Ind vs Aus 1st T20

Ind vs Aus 1st T20 – நேற்று முதல் ‘டி-20’ போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைத்தனர்.

ஆனால் இந்திய அணி பவுலர்கள் விட்டுகொடுக்காமல் போராடிய போதும், கடைசி பந்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, முதல் போட்டி விசாகப்பட்டனத்தில் நடந்தது. சிறுது மாற்றத்துடன் இரு அணிகளும் களம் இறங்கின.

ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அறிமுகமானார். இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இளம் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் இடம் பிடித்தார்.

தமிழக ‘ஆல்-ரவுண்டர்’ விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்படவில்லை. மயாங்க் மார்கண்டே அறிமுக வாய்ப்பு பெற்றார்.

வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக உமேஷ் யாதவ் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மறுமுனையில் அசத்திய லோகேஷ் ராகுல்.

இவருக்கு துணை கொடுத்த கேப்டன் கோலி, பெரேன்டோர்ப் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது ஆடம் ஜாம்பா ‘சுழலில்’ கோலி 24 எடுத்து வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்ட் 3 ரன் மட்டுமே எடுத்து ‘ரன்-அவுட்’ ஆனார். அதே சமயம் ராகுல் தனது 35 பந்தில் அரைசதமடித்தார். இவர், 50 ரன்னில் கூல்டர்-நைல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 1 ர‌ன் , குர்னால் பாண்ட்யா 1 ரன் என ரன் எதுவும் பெரிதாக எடுக்காமல் அவுட்டாக்கினார்க‌‌ள். இவர்களை தொடர்ந்து உமேஷ் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார்.

நிதானமாக ஆடிய தோனி, கூல்டர்-நைல் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் தந்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. தோனி (29), யுவேந்திர சகால் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் என்னமோ சரியாக இல்லை. அதற்கு பின் இணைந்த ஷார்ட், மேக்ஸ்வெல் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது.

உமேஷ் யாதவ் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல், சகால் வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டினார். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல், 40 பந்தில் அரைசதம் எட்டினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது சகால் ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (56) ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷார்ட் (37) ‘ரன் அவுட்’ ஆனார். குர்னால் பாண்ட்யா ‘சுழலில்’ ஆஷ்டன் டர்னர் (0) சிக்கினார். பும்ரா வீசிய 19வது ஓவரில் ஹேண்ட்ஸ்கோம்ப் (13), கூல்டர்-நைல் (4) அவுட்டாகினர்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய இந்த ஓவரின் முதல் 4 பந்தில் 8 ரன் கிடைத்தது.

கடைசி 2 பந்தில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கம்மின்ஸ், கடைசி பந்தில் 2 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. கம்மின்ஸ் (7), ரிச்சர்ட்சன் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 8 ‘டி-20’ போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தோல்வி.