ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும்: இயக்குனர் மைக்கேல் கே.ராஜா வாய்ஸ்..
குறைந்த பட்ஜெட்டில், அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட படம் தான் போகுமிடம் வெகுதூரமில்லை. இந்த படத்தை மைக்கேல் கே.ராஜா இயக்கினார்.
இப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே.ராஜா. அவர் கூறும்போது,
‘ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். படம் வெளியானதுமே பார்த்துவிட்டு திரைத்துறையினர் பலர் பேசினார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி, ‘10 நிமிடம் பார்க்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், கதை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. வாழ்த்துகள்’ என்றார்.
இயக்குநர் அகத்தியன் உட்பட பலர் பேசினார்கள். இது தியேட்டருக்கான படம் என்றாலும், ஓடிடி-யில் இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. ஓடிடி தளம் இல்லை என்றால், நான் அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்பது கடினமாகி இருக்கும்.
அடுத்து இயக்கும் படத்தை இன்னும் சிறப்பாகப் பண்ண வேண்டிய பொறுப்பை இந்தப் படத்துக்கான வரவேற்பு கொடுத்திருக்கிறது. அதனால், நிதானத்துடன் கவனமாகவும் புதிய படத்துக்கான வேலையில் இருக்கிறேன்’ என்றார்.
முன்னதாக, ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் நகைச்சுவை தெறிக்க இருந்தது எனவும், விமல் மற்றும் கருணாஸ் கேரக்டர்கள் ரசிக்கக் தக்கவையாக இருந்தது எனவும், படம் போரடிக்கவில்லை என்றெல்லாம் பாஸிட்டிவ்வான கருத்துகள் படத்தை வெற்றி பெறச் செய்தது.
படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், பொழுதுபோக்கு காட்சிகளாய் புதிய சீன்களுடன் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.