போர்வாள் ஏந்தி அரசி வருகிறார்: அட்லி இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே
அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது படக்குழு. ‘TheFacesOfAA22xA6’ என்று ஹேஷ்டேகுடன் இது பகிரப்பட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 16 வினாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் அட்லி, தீபிகா படுகோனிடம் கதையை விவரிக்கிறார்.
தொடர்ந்து ஸ்க்ரீன் டெஸ்ட் பணிகள் நடைபெறுகிறது. அதில், குதிரை மீது போர்வாளை ஏந்தியபடி தீபிகா பயிற்சி செய்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.படக்குழுவும் ‘அரசியின் வருகை’ என சொல்லி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 2023-ல் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்த ‘ஜவான்’ படத்தில் தீபிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சயின்ஸ் பிக்ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் பான் வேர்ல்ட் படமாக இது இருக்கும் என படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். இந்த மாத இறுதியில் ஷுட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்காகத் தமிழ் மற்றும் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபிகா இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது. பார்க்கலாம், அரசியின் வருகை எதற்கு என.!