Csk Heartsick Victory
Csk Heartsick Victory

Csk Heartsick Victory :

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டு சான்ட்னெர் இடம் பெற்றார். தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடு (1 ரன்), ஷேன் வாட்சன் (13 ரன்) இருவரும் 4-வது ஓவருக்குள் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினர்.

கேதர் ஜாதவும் தாக்குப்பிடிக்கவில்லை. 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்ததால் அணியின் ரன்வேகம் மந்தமானது. இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் டோனியும் இணைந்தனர்.

அடுத்த 24 பந்துகளில் ஒரு முறை கூட பந்து எல்லைக்கோட்டை நெருங்கவில்லை. அதன் பிறகு ரெய்னா, கோபாலின் சுழலில் ஒரு சிக்சர் அடித்தார். அதைத் தொடர்ந்து ரன்ரேட் படிப்படியாக அதிகரித்தது.

ஸ்கோர் 88 ரன்களை எட்டிய போது ரெய்னா (36 ரன், 32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) உனட்கட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். 5-வது விக்கெட்டுக்கு வெய்ன் பிராவோ வந்த பிறகே உண்மையிலேயே ஆட்டம் சூடுபிடித்தது.

குல்கர்னியின் ஒரே ஓவரில் டோனியும், பிராவோவும் தலா ஒரு சிக்சரை தூக்கி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து டோனி, பவுண்டரியோடு தனது 21-வது அரைசதத்தை நிறைவு செய்தார். பனிப்பொழிவுக்கு மத்தியில் ரன்ரேட்டை ஓரளவு அதிகரிக்கச் செய்த பிராவோ 27 ரன்களில் (16 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து ஜெய்தேவ் உனட்கட்டின் இறுதி ஓவரில் ஜடேஜா ஒரு சிக்சர் அடிக்க, டோனியும் 3 பிரமாதமான சிக்சர்களை நொறுக்கி பரவசப்படுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் சென்னை பேட்ஸ்மேன்கள் 87 ரன்களை சேகரித்தனர். டோனி 75 ரன்களுடனும் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 176 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரஹானே (0), அடுத்து வந்த சஞ்சு சாம்சன் (8 ரன்) இருவரும் சர்ச்சைக்குரிய முறையில் கேட்ச் ஆனார்கள்.

அதாவது அவர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சென்னை வீரர்கள் தரையோடு பிடித்ததாக சந்தேகம் கிளம்பியது. டி.வி. ரீப்ளேவுக்கு பிறகு அவர்களது அவுட் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜோஸ் பட்லர் 6 ரன்னில் விரட்டப்பட்டார். திரிபாதி (39 ரன்), ஸ்டீவன் சுமித் (28 ரன்) சரிவை சற்று நிமிர்த்தினர்.

இதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்சும், ஜோப்ரா ஆர்ச்சரும் கைகோர்த்து அதிரடி காட்டியதால் பரபரப்பு தொற்றியது.

18-வது ஓவரில் 19 ரன்களும், 19-வது ஓவரில் 13 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ வீசினார்.

முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் (46 ரன், 26 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஓங்கி அடித்த பந்தை ரெய்னா சூப்பராக கேட்ச் செய்ய, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. எஞ்சிய 5 பந்துகளில் பிராவோ மேலும் ஒரு விக்கெட்டை கபளகரம் செய்ததோடு 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது.

தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ராஜஸ்தான் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.