Pushpa 2

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்: திரையுலகில் பரபரப்பு..

நடிகர் அல்லு அர்ஜூன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் காண்போம்..

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு நாள் முன்னதாக, 4-ந் தேதி இரவு, ஐதராபாத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. அந்த காட்சியை காண அல்லு அர்ஜூனும் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில், கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயங்கி விழுந்த அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் அல்லு அர்ஜுன்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, அல்லு அர்ஜூனின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரை கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், காவல்துறை வாகனத்தில் அல்லு அர்ஜூனை ஏற்றுவதற்கு முன்னர், அல்லு அர்ஜூன் தேநீர் அருந்தினார். மேலும், அவருக்கு அருகில் அழுதுகொண்டு நின்றிருந்த அவரது மனைவி சினேஹா ரெட்டிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து, ‘பயப்படக்கூடாது, அழக்கூடாது’ என கூறினார்.

பின்னர், அல்லு அர்ஜூனை ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அவர், சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாக, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. எல்லா சம்பவத்திற்கும் தனி நபரை குற்றம் சாட்டுவது வருத்தமளிக்கிறது. இந்த சூழ்நிலை நம்ப முடியாதது. இதயத்தை உடைக்கிறது’ என கூறியுள்ளார்.

court grants interim bail to pushpa 2 actor allu arjun
court grants interim bail to pushpa 2 actor allu arjun