சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்தார்..
‘கூலி’ படத்தில் அனிருத்துடன், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
தமிழ்த்திரையில் செம பிஸியாக இசைக்கிறார் அனிருத். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத் வசம் உள்ளன.
விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களையும் வைத்திருக்கிறார்.
அனிருத் போல, தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இவரை குட்டி அனிருத் என்றும் அழைக்கத் தொடங்கி விட்டனர். அனிருத்தை ‘கொலவெறி’ பாடல் பிரபலமாக்கியதை போல், சாய் அபயங்கரை ‘ஆசை கூட’ மற்றும் ‘கச்சி சேர’ ஆகிய பாடல்கள் பிரபலமாக்கின. இதனால், சாய் அபயங்கருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
அவ்வகையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள சாய் அபயங்கருக்கு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் என தொடர்கின்றன.
ஒரே நேரத்தில் 3 படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர், தற்போது கூலி படத்தில் பணியாற்றி வரும் தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘கூலி’ படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சாய் அபயங்கரை இசையமைப்பாளராக மாற்றி விட்டார்களா? என்கிற கேள்வி எழலாம். ஆனால், அங்க தான் டுவிஸ்டே இருக்கிறது. அனிருத்திடம் கூடுதல் புரோகிராமராக பணியாற்றி வருகிறாராம் சாய் அபயங்கர்.
இதற்கு முன்னர் அனிருத் இசையமைத்த ‘தேவரா’ படத்திலும் கூடுதல் புரோகிராமராக பணியாற்றிய சாய் அபயங்கர், தற்போது கூலி படத்திலும் பணியாற்றி வருவதை அண்மையில் விருது விழா ஒன்றில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவை மிஞ்சிய சிஷ்யனாக சாய் வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.!