மோகன்லால் நடித்து இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?
நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இது பற்றிய அப்டேட் வருமாறு:
மோகன்லால் நடித்து இயக்கும் ‘பரோஸ்’ படம், பேன்டஸி கதையம்சம் கொண்டதாகும். படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாகிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் டி’காமா’ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் எழுதியுள்ளார். பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து இப்படம் பேசுகிறது.
‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டிரெய்லர் வரும் 15-ந்தேதி வெளியாகிறது.
காலமறிந்து விதைத்தால் அறுவடையாகும் என்பது போல, இப்படத்தின் கதைக்கேற்ப ரிலீஸ் தேதியும் பொருந்தி வந்திருக்கிறது. லால் சாரின் முதல் இயக்கத்தை பார்ப்போம்.!