8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து
இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா.
இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார்.
மேலும், இளையராஜாவுக்கு பலரும் பல பட்டங்களை கௌரவமாக கொடுத்துள்ளார்கள். ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த ‘இசைஞானி’ என்ற பட்டம் அவரது இசையைப் போலவே நிலைத்துவிட்டது.
இந்நிலையில், இன்று மார்ச் 2-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘இசைஞானி’ இளையராஜாவை சந்தித்து, அவரது லண்டன் சிம்பொனிக்கு வாழ்த்து கூறினார். இது தொடர்பாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,
‘இசைஞானி’ இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼 ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணி மகுடம் எனத் திகழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, நான் காரில் செல்லும்போது உங்கள் பாடல்களைத்தான் அதிகம் கேட்டுக் கொண்டு செல்கிறேன். மறைந்த பாடகர் பாலசுப்ரமணியம் உங்கள் இசையில்தான் அதிக பாடலைப் பாடியுள்ளார். உங்கள் பாடல்களைத்தான் நான் பெரும்பாலும் கேட்டுக் கொண்டே உள்ளேன்’ எனக் கூறினார்.
மேலும், இளையராஜா பேசும்போது, எனக்கு ‘இசைஞானி’ என்ற பெயரை வைத்தது ஐயா தான் (மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி) எத்தனையோ பெயர் வைத்தார்கள். ஆனால், அந்த பெயர்தான் நிலைத்துள்ளது என பூரிப்புடன் கூறினார். இது தொடர்பான வீடியோவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.