நடிகர் Yogi Babu நடிப்பில் உருவாகி வரும் ‘சன்னிதானம் பிஓ’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ வெளியாகி, பக்தி உணர்வை தூண்டும் பாடலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சபரிமலை யாத்திரையின் நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் உணர்ச்சிபூர்வ குரலும், பாடலாசிரியர் மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளும், இசையமைப்பாளர் ஏ.ஜி.ஆர் வழங்கிய மெலோடியும் இணைந்து பாடலுக்கு தனித்துவம் அளித்துள்ளன.
முன்னதாக, இயக்குநர் Cheran மற்றும் நடிகை Manju Warrier வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியான இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
அமுத சாரதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் Yogi Babu உடன் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட ஆன்மீக மற்றும் இயற்கை அழகு மிக்க இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், உண்மைநிலை உணர்வுகளுடன் கூடிய திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சன்னிதானம் பிஓ’ திரைப்படம், ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளை பேசும் இந்த படம், பார்வையாளர்களின் மனதை தொடும் ஒரு ஆன்மீகப் பயணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அஜினு ஐயப்பன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.கே படத்தொகுப்பை கவனித்துள்ளார். கலை இயக்குநராக விஜய் தென்னரசு, சண்டைப்பயிற்சியாக மெட்ரோ மகேஷ், நடன அமைப்பில் ஜாய் மதி, ஆடை வடிவமைப்பில் நடராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
பான்-இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் ‘சன்னிதானம் பிஓ’, மே மாதத்தில் திரைக்கு வர உள்ளது. வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.