‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில் வரும் 27-ந்தேதி தீர்ப்பு..

விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, ஜனவரி 9-ந்தேதி வெளியிடத் தயாரிப்புக் குழு திட்டமிட்டது. எனினும், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால், சிக்கல் ஏற்பட்டது. இதை எதிர்த்துப் படத் தயாரிப்புக் குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9-ஆம் தேதி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தலைமை நீதிபதி அமர்வு தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஜனவரி 20-க்கு ஒத்திவைத்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து படக்குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே அணுகுமாறு அறிவுறுத்தினர்.

உயர் நீதிமன்றம் ஜனவரி 20-ல் உத்தரவு பிறப்பிக்க முயலும் எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர். அதன்படி, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ஜனவரி 20 அன்று நடந்தது.

தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “படத்தை மறுஆய்வுக்கு அனுப்பும் முடிவு ஜனவரி 5-ந்தேதியே ‘இ-சினி பிரம்மாண்’ இணையதளம் வாயிலாக தயாரிப்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்புக் குழு சான்றிதழ் கோரி ஜனவரி 6-ந்தேதி வழக்கு தொடங்கி, ஜனவரி 9-ந்தேதி சாதகமான உத்தரவைப் பெற்றது. கேட்காத பரிகாரத்தைத் தனி நீதிபதி வழங்கியது சட்டத்துக்குப் புறம்பானது’ என்றார்.

படத் தயாரிப்புக் குழுவின் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், ‘தனி நீதிபதி தீர்ப்பை வழங்கிய மறுநிமிடமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதன் நடவடிக்கையால் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அத்துடன் தணிக்கை வாரியம் வெளிப்படையாகச் செயல்படவில்லை’ என தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்ற நடைமுறைகளை முடித்து ஒரே நாளில் தீர்வு கோருவதை ஏற்க முடியாது. சான்றிதழ் பெறும் முன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யக் கூடாது. இயற்கை நீதியைப் பின்பற்றியே எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்’ எனக் கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் தீர்ப்பு ஜனவரி 23-ந்தேதி வெளியாகும் என்றும் படம் குடியரசுத் தினத்தையொட்டி வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி ஜனநாயகன் படம் குறித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்காது. அதற்கு பதிலாக வரும் 27-ந்தேதேதி பிறப்பிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

vijai in jananayagan movie release case judjment
actor vijaycourt orderjananayagan movieநீதிமன்றம்ஜனநாயகன்