பாலாவின் ‘வணங்கான்’ என்ன “சொல்ல” வருகிறான்?: திரை விமர்சனம்

மாற்றுத் திறனாளிகளின் வலிகளை, மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அறிய முடியும். அவ்வகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கொடூர தண்டனை வழங்குதலும் “தர்மம் தான்” என உணர்த்துபவனே இங்கே ‘கோட்டி’ என்பவனின் உள்ளக்கரு.

அதாவது, கன்னியாகுமரியில் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து உயிரான தங்கை (ரிதா) தேவியுடன் வாழ்ந்து வருகிறார் கோட்டி (அருண் விஜய்).

இவர், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர். சுனாமியால் பெற்றோரை இழந்தவர். ‘இது தவறு’ என்று உணர்ந்தால் தீக்கனலாய் தாக்கும் முன்கோபக்காரர்.

இந்நிலையில், கோட்டியை ஊரில் இருப்பவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் காவலாளி வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். அங்கே பார்வையற்ற பெண்கள் குளிப்பதை மூன்று பேர் பார்க்கிறார்கள். இந்நிகழ்வு தெரிந்த கோட்டி, இரண்டு பேரை பிடித்து அடித்து ரணகளமாய் துவம்ஷம் செய்து கழுவிலேற்றி கொலை செய்கிறார். குற்றத்தையும் ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்கிறார்.

எதற்காக கொலை செய்தாய்? என ஆவேசமாய் அதிரடியாய் விசாரிக்கும் அதிகாரி (சமுத்திரக்கனி) கதிரவனிடம் ‘ஊமை பாஷையாய்’ சொல்வதற்கு மறுக்கிறார்.

இதனால், மரண தண்டனை கிடைக்குமே, தனது உயிருக்கு உயிரான ஒரே அண்ணனை இழந்து விடுவோமே என பதறிய தங்கை தேவி; அண்ணனிடம் எவ்வளவோ மன்றாடி அழுதும் உருகி கேட்டும்.. தான் செய்த கொலைக்கான “அந்த அசிங்கமான அருவருப்பான” காரணத்தை சொல்லாமல் செல்கிறார்.

இச்சூழலில், கோட்டி மூன்றாவது நபரையும் தேடிப் பிடித்து வதம் செய்து ரத்தச்சேறாக.. மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு நிர்வாணமாக்கி, கண்களையும் தோண்டியெடுத்து துடிதுடிக்க ‘சம்ஹாரம்’ செய்தே அமைதியடைகிறார்.

இச்சம்பவம் எட்டுத் திசைகளிலும் தகிதகிக்க, “கன்னியாகுமரியில் 3 பேர் கொடூர கொலை; காரணம் என்ன?” என மீடியா பரபரக்கிறது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கண்ணியமுள்ள நீதிபதியான (மிஷ்கின்) குபேரன், இவ்விசித்திர வழக்கை சட்டரீதியாகவும், நிகழ்வின் தன்மையையும் நுட்பமாய் புரிந்து, வழக்கை தள்ளுபடி செய்கிறார்.

கோட்டி, விடுதலை உணர்வுடன் தங்கையை காண வருகிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவள் அவசரப்பட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கிறாள். கோட்டிக்கு பித்தம் ஏறி சித்தம் கலங்க, தன் இரு கைகளால் தங்கையின் சடலத்தை ஏந்தி நெஞ்சம் நொறுங்க தீராவலியாய் கதறுகிறார்; வானம் பார்த்தே அனாதையாய் அழுது அரற்றுகிறார்- என்பதோடு காட்சி நிறைவு பெறுகிறது.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கவனமாய் செதுக்கப்பட்டிருக்கிறது. அருண் விஜய்யை காதலிக்கும் ரோஷிணி பிரகாஷின் புதுப் புது கெட்டப் மற்றும் பல மொழித்திறமை ரசிக்க வைக்கின்றன.

தங்கையான ரிதா கண்ணீராய் கரைந்து ‘பாசத்தால் வெடித்து’ அளப்பரிய முகபாவனைகளால் அனைவரது கண்களையும் குளமாக்கி விடுகிறார். அவ்வகையில், விருது நிச்சயம் பெறுவார் என நம்பலாம். ஆம்.. “எல்லாப் புகழும் பாலாவிற்கே” என்பது தெரிந்தது தானே.

கதைக்களப் பயணத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்களும், சாம்.சி.எஸ்.பின்னணி இசையும் படைப்புக்கேற்ற சிறந்த வார்ப்பாய் பொருந்தியுள்ளது; ஒவ்வொரு ஃபிரேமையும் குரு தேவ் ஒளிப்பதிவும் உயிர்ப்புடன் காட்டியிருக்கிறது.

70%
'வணங்கான்' வணக்கத்திற்கு உரியவன். ஆம்.. அனைவரும் மனிதநேயமாய் ஆராதிக்கலாம், ஆதரிக்கலாம்.!

வணங்கான் திரை விமர்சனம்

  • Design
AruldassArun VijayBala SivajiBrindha SarathyChhaya DeviDr. Yohan ChackoKavitha GopiMai Pa NarayananMunish SivagurunathMysskinRidhaRoshni PrakashSamuthirakaniShanmugarajanVanangaanvanangaan movievanangaan movie reviewvanangaan reviewவணங்கான்வணங்கான் திரை விமர்சனம்வணங்கான் விமர்சனம்