60வது ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான 60வது ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு கிடைத்த மூன்றாவது ஞானபீட விருது என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

டெல்லியில் ஜூலை 13 அன்று நடைபெற்ற விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய வைரமுத்து, தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து அனைவரையும் நெகிழ வைத்தார்.

“தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில் உள்ள 60 வீடுகள் மட்டுமே கொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். வைகை அணை கட்டப்பட்டபோது என் ஊர் நீரில் மூழ்கியது. அப்போது இடுப்பில் பெண் குழந்தையையும், கையில் என்னையும் அழைத்துக் கொண்டு என் தாய் கரையேறினார். அந்த சிறுவன்தான் இன்று உங்கள் முன் ஞானபீட மேடையில் நிற்கிறான்,” என்று உருக்கமாகக் கூறினார்.

மேலும், “வறுமை எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது; பள்ளி எழுத்துக்களைக் கற்றுக்கொடுத்தது. இரண்டும் என்னை கவிதையிடம் கொண்டு சென்றன,” என்றார்.

இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர்,

“நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு என்கிறது உபநிஷத். அமைந்ததை விரும்பாவிட்டால் விரும்பியதை அமை என்கிறது இலக்கியம்,” என்று பேசினார்.

இந்த விருது தனக்கே சொந்தமானதல்ல என்றும், தமிழின் இலக்கிய மரபுக்கே உரியது என்றும் குறிப்பிட்ட வைரமுத்து,

“இந்த 60 கிராம் அமிர்தத்தை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதி, பாரதிதாசன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்ட தமிழின் மகத்தான படைப்பாளிகளுக்கும், காளிதாசர், வால்மீகி, வேதவியாசர், தாகூர், ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான் போன்ற உலக இலக்கிய ஆளுமைகளுக்கும் பகிர்ந்துவிட்டால், கரண்டியில் ஒட்டியிருக்கும் ஈரப்பசை மட்டுமே என் பங்காக இருக்கும்,” என்று பணிவுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“இந்த விருது என்னை ஓய்வெடுக்கச் செய்யாது. ஓடிவந்த குதிரைக்கு கொடுக்கப்படும் புல் அல்ல இது; மேலும் வேகமாக ஓடச் செய்யும் சாட்டையடி. நான் இன்னும் வேகமாக எழுதுவேன்,” என்று உறுதியளித்தார்.

இறுதியாக, இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பிய அவர்,

“தாகூருக்குப் பிறகு 113 ஆண்டுகளாக இந்தியா இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறவில்லை. நோபல் தரத்திற்கு இந்தியாவில் படைப்பாளிகள் உருவாகவில்லையா? அல்லது உலகம் அவர்களை கண்டுகொள்ளவில்லையா? ஒவ்வொரு துறைக்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன; இலக்கியத்துக்கென்று ஒரு தனி பல்கலைக்கழகம் உருவாக வேண்டிய நேரம் வரவில்லையா?” என்று கேள்வி எழுப்பி தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.

கவிஞர் வைரமுத்துவின் இந்த ஏற்புரை, அவரது வாழ்க்கைப் பயணத்தையும், தமிழ்மொழி மீதான பற்றையும், இலக்கியம் குறித்த அவரது பார்வையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

VairamuthuVairamuthu Honoured with India's 60th Jnanpith Awardவைரமுத்து