விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்..

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடுக்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாகத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ்ஷா இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை எழுத, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

கடந்த 2019-ல் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

thiagarajan kumararaja vijay sethupathi film titled pocket novel
pocket novel moviestoryVijay Sethupathiஇளையராஜாமாளவிகா மோகனன்