‘உன்னால் முடியும், உன்னால் முடியும் தோழா..’ என்ற நம்பிக்கை நிறைந்த நெஞ்சுறுதியோடு அரசியலில் இறங்கி அதற்கான உரிய பணிகளிலும் விரைந்துள்ளார் தளபதி விஜய்.
இத்தகு பரபரப்பான சூழலில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 27-ந்தேதி தவெக முதல் மாநாடு நடைபெறுகிறது.
இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மிகவும் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்..
‘கடந்த மாதத்திலேயே மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு மிகவும் குறைவான நேரத்தின் காரணமாக கைவிடப்பட்டது எனவும், இதனால் மாநாடு நடப்பு ஒத்திவைக்கப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டது.
மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் தெரிவித்தார்.
மாநாட்டு நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள பகுதியில், விஜய் நடந்து வர தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மழை பெய்து மாநாட்டு திடலுக்குள் மழை நீர் உள்ளே வராமல் இருக்க, சேர்கள் போடப்படும் தரைத்தளத்தளம் சுமார் மூன்று அடிகள் வரை உயர்த்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியானது.
மேலும், தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, 500 சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், 300 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
ஏற்கனவே, விஜய் மாநாடு தொடர்பாக அவரது தொண்டர்களுக்கு, இதற்கு முன்னர் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில், மூன்றாவது கடிதத்தில் அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.
மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு. உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம்.
நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள்.
நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்.
வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.
2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்’ என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில், யாராயினும்.. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் தானே.!