சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது 47-வது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இதை மலையாள பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்குகிறார். இவர், ‘ஆவேஷம்’ என்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர். சூர்யா-47 படத்தில் நஸ்ரியா, ‘பிரேமலு’ நஸ்லென் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் படமான இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
- Advertisement -
இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. பெரும் கூட்டத்துக்கு இடையே போலீஸ் உடையில் அவர் நிற்பது போன்ற அப்புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சூழலில் சூர்யா-47 படத்தின் ப்ரோமோவை புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தின் ப்ரோமோவை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இடைவேளையில் ஒளிபரப்ப படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பட இண்டெர்வெலின் போது சூர்யா- 47 ப்ரோமோ ஒளிப்பரப்பப்பட்டால், அது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.