1965-ம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ்த் திரைப்படமான ‘திருவிளையாடல்’, மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் ஒலி தரத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் நடிப்பில் உருவான இப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை மையமாகக் கொண்டது.
கதை, வசனம், நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் எனப் பல்வேறு அம்சங்களில் தனித்துவம் பெற்ற ‘திருவிளையாடல்’, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, கே.வி. மகாதேவனின் இசையும், கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் படத்தின் சிறப்பை மேலும் உயர்த்தின.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 1-ம் தேதி சென்னை காசினோ திரையரங்கில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- Advertisement -
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகன் ஏ.என். பரமசிவம், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குநருமான பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் உருவாக்கம், ஏ.பி. நாகராஜனின் இயக்கத் திறமை, சிவாஜி கணேசனின் நடிப்பு மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் பங்களிப்பு குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பல ஆண்டுகளைக் கடந்தும் தனது தனித்துவத்தை இழக்காத இப்படத்தின் அசல் தன்மையைப் பாதுகாத்து, இன்றைய தலைமுறையினரும் பெரிய திரையில் ரசிக்கும் வகையில் டிஜிட்டல் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பழைய தலைமுறை ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான படைப்பை மீண்டும் திரையரங்கில் ரசிக்கவும், புதிய தலைமுறையினர் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றைத் திரையரங்க அனுபவத்துடன் காணவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மறுவெளியீட்டுப் பணிகளை ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா முன்னெடுத்து வருகிறார். திரைப்பட வெளியீட்டு ஒருங்கிணைப்பாளராக பி.வி. முரளி செயல்பட்டு வருகிறார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரவுள்ள ‘திருவிளையாடல்’ திரைப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.