இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான பின்னணி இசைக்காக தேசிய அளவில் மீண்டும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் விருதுகளில் ‘சுழல் 2’ வெப் தொடர் மொத்தம் மூன்று முக்கிய பிரிவுகளில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளது. Best Series (Regional), Best Original Soundtrack – Regional (சாம் சி எஸ்) மற்றும் Best Actor – Series (Female) Critics, Regional (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்று, தரமான OTT படைப்பாக தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பின்னணி இசையில் தனித்துவ முத்திரை
பின்னணி இசையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம் சி எஸ், ஒரு காட்சியின் பதற்றம், உணர்வு, மர்மம் மற்றும் வலியை இசை மூலமாகவே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமையால் இந்திய திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் விசாரணைக் கதைகளில் அவரது இசை, கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே மாறுகிறது.
‘சுழல் 2’ வெற்றிக்கு முக்கிய காரணம் இசை
- Advertisement -
கிராமத்து பின்னணி, குடும்ப உறவுகள், மர்மம் மற்றும் குற்ற விசாரணை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘சுழல் 2’ தொடரில், ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப சாம் சி எஸ் வடிவமைத்த பின்னணி இசை, கதையின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்தியது. அந்த இசை வடிவமைப்புக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாகவே இந்த விருது பார்க்கப்படுகிறது.
பல மொழிகளில் பிஸியான இசைப் பயணம்
திரைப்படம், வெப் தொடர் என எந்த வடிவமாக இருந்தாலும் கதைக்கு ஏற்ற இசையை வழங்கும் திறனை தொடர்ந்து நிரூபித்து வரும் சாம் சி எஸ், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.
தமிழில் ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி திரைப்படம், ‘டிமான்டி காலனி 3’ உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், நடிகர் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தேசிய அளவிலான அங்கீகாரங்கள், மொழிகளைத் தாண்டிய படைப்புகள் மற்றும் புதுமையான இசை முயற்சிகள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் சி எஸ், இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறார். ‘சுழல் 2’ தொடருக்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.