சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார்.
தற்போது, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு கமலின் தயாரிப்பில் உருவாகப்போகும் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ரஜினியும் சந்தித்துக்கொண்டனர். அப்போது நிகழ்ந்த உரையாடலை வைரமுத்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். பாசமுள்ள மனிதனப்பா, நான் மீசை வெச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இலக்கியமாக இருக்கின்றார் ரஜினி. உணவு முறை, உடல்நிலை குறித்து பேசிக்கொண்டிருந்த எங்களின் உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. தமிழகத்தின் அரசியல் குறித்தும் விவாதித்தோம், அதுமட்டுமல்லாமல் வடநாட்டு அரசியல் குறித்து அவர் பேசிய விஷயங்களால் நான் அசந்துபோய்விட்டேன், அவரிடம் அவ்வளவு தெளிவு உள்ளது,
அதோடு இல்லாமல் சினிமா பயணத்தில் அவரின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திட்டத்தையும் கூறினார். குறித்துக் கொள்ளுங்கள், 2027 ஆம் ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு ஆண்டாக அமையும். அவரிடம் முதிர்ச்சி தெரிந்தாலும் முதுமை தெரியவில்லை. ‘இளமை இனிமேல் போகாது, முதுமை எனக்கு வாராது’ என்ற என் தமிழ் பொய்யாகவில்ல என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
இந்தாண்டு ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் அடுத்தாண்டு தொடக்கத்தில் ‘தலைவர் 173’ படமும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் கமலுடன் ரஜினி இணைந்து நடிக்கப்போகும் பட அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது. 75 வயதிலும் அசராது உழைக்கும் ரஜினி இளைஞர்களுக்கு முன்னுதாரணமே.!