ரஜினி-கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மைதான் என சௌந்தர்யா ரஜினிகாந்தும் உறுதிபடுத்தியுள்ளார்.
இப்படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ‘கூலி’ படத்தின் எதிர்மறை விமர்சனத்தால் இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பது மாதிரியான கதைகள் இருக்கிறதா என சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினி-கமல் இருவரும் இணைந்து நடிப்பது மாதிரியான கதையொன்றை ரஜினியிடம் கூறியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்துவிடவே, அவரையே இயக்குநராக முடிவு செய்திருக்கிறார்கள்.
ரஜினி-கமல்-நெல்சன் கூட்டணி குறித்த அறிவிப்பெல்லாம், ‘ஜெயிலர் 2’ வெளியீட்டுக்கு பின்பே வெளியாகும் என கூறப்படுகிறது. இப்போதே வெளியிட்டால் ‘ஜெயிலர் 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கும் என்பதே இதற்கு காரணம்.
இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ரஜினி-கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.