சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் படுவேகமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது 173-வது திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்து, பின் கதை தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அவர் விலகினார். அவரைத் தொடர்ந்து ‘டான்’ பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
குறிப்பாக, இப்படத்தின் அறிவிப்பு வீடியோ மற்றும் அதன் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருந்த சூழலில், தற்போது சிபி சக்ரவர்த்தியும் இப்படத்திலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விலகியதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிபி சக்ரவர்த்திக்கு மாற்றாக, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இளம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ‘ரஜினி 173’ படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே படத்திற்காக அடுத்தடுத்து இரண்டு இயக்குநர்கள் மாற்றப்படுவது திரையுலகில் அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. புதிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் ஸ்டைல் ரஜினிகாந்திற்குப் பொருந்துமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.