24-ம் தேதி திரையரங்குகளில் தரமான சம்பவம் காத்திருக்கிறது! – நானி நம்பிக்கை

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நானியுடன் கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஸ்வரூப் ரெட்டி, நானி நடிப்பதால் ‘தி பாரடைஸ்’ படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதாகவும், ரசிகர்களின் ஆதரவு இப்படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, தனக்கு தமிழ் தெரியாது என்றும், அடுத்த படத்திற்குள் தமிழைக் கற்றுக்கொண்டு பேசுவேன் என்றும் கூறினார். மேலும், தாய் மற்றும் புரட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘தி பாரடைஸ்’ உருவாகியுள்ளதாகவும், இப்படம் ரசிகர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நானி, “நான் நல்ல நடிகரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களைப் போன்ற ஒரு நல்ல பார்வையாளன் நான்” எனத் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும், ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை குறிப்பிட்ட நானி, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக ‘தி பாரடைஸ்’ இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“ஒவ்வொரு ரசிகருக்கும், பார்வையாளருக்கும் இதுபோன்ற ஒரு மாஸான திரைப்படம் தேவை. இந்தப் படம் அப்படிப்பட்ட திரைப்படம். 24-ம் தேதி திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்த பிறகு நீங்களும் இதை சொல்வீர்கள்” என நானி கூறினார்.

மேலும், படத்தில் அழுத்தமான எமோஷன்களுடன், திரையரங்கில் ரசிக்கக்கூடிய அனுபவமும் இருக்கும் என தெரிவித்தார்.

தமிழ் சினிமா தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும், கமல்ஹாசன், மணிரத்னம், பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல தமிழ் திரையுலக சாதனையாளர்களிடம் இருந்து தனது சினிமா ஆர்வத்திற்கான உத்வேகத்தை பெற்றதாகவும் நானி தெரிவித்தார்.

சென்னை மற்றும் தமிழகத்துடன் தனக்கு நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், தமிழ் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பை பல தருணங்களில் உணர்ந்துள்ளதாகவும் கூறிய நானி, தமிழ் ரசிகர்கள் மீதான அன்பின் காரணமாகவே தனது படத்திற்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

தனது திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’ என்றும், இந்தப் படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாகவும் நானி கூறினார்.

“24-ம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது” என நம்பிக்கை தெரிவித்த அவர், அடுத்த முறை சென்னைக்கு படத்தை விளம்பரப்படுத்த வரும்போது ரசிகர்கள் தன்னை படத்தில் நடித்துள்ள ‘ஜடல்’ கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி அழைப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பதிலளித்தனர். மேலும், சென்னையில் உள்ள நானி ரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ சிறப்புக் காட்சிக்கான முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.

NaniNani’s The Paradise Set for Grand Release on September 24The Paradise