அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் தனது மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பு வைத்துள்ளது.

இந்த எண்டர்டெயின்மெண்ட் திரைப்படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மே 1, 2026 அன்று தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ‘புஷ்பா’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்து வருகிற இந்த நிறுவனம், தற்போது புதிய கதைக்களங்களுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இப்படத்தை இயக்குவது ராஜா கருப்பசாமி. கதையின் மையமாக ஒரு வித்தியாசமான திருமணம், ஒரு இரவு, ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத இரண்டு பேர், பல ஆச்சரியங்களும் பொய்களும் இணைந்து ஒரு இரவில் வாழ்க்கையை மாற்றும் சம்பவங்களாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேத்தன், ஏ. வெங்கடேஷ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், “பெரிய அளவிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களுடன் சேர்த்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வலுவான கதைகளையும் உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ‘மொத ராத்திரி’ அதற்கான ஒரு சிறந்த முயற்சி. புதிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது” என்றார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் அறிமுகமாகுவது எனக்கு பெருமை. படைப்பு சுதந்திரத்துடன் பணியாற்ற வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘மொத ராத்திரி’ ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்கும்” என்றார்.

இந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை சுரேந்திரன் பரஞ்சோதி கவனிக்க, படத்தொகுப்பை அசோக் அர்ஜூனன் மேற்கொள்கிறார். இசையை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பரத் சங்கர் அமைக்கிறார். ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி, கலை இயக்கத்தை ஏ. பாலுமகேந்திரா மேற்கொள்கிறார்கள்.

புதிய கதைக்களம், இளம் திறமையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சங்கமமாக உருவாகும் ‘மொத ராத்திரி’ திரைப்படம், ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ளன.

Anishma AnilkumarLokesh Kanagaraj RishikanthModha RathiriModha Rathiri starring Anishma Anilkumar and Rishikanth!அனிஷ்மாமொத ராத்திரிரிஷிகாந்த்