தந்தை – மகன் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான களத்தைக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான காட்சியமைப்பும், பரபரப்பான திரைக்கதையும் இணைந்து ‘மகுடம்’ படத்தை சுவாரஸ்யமான ஆக்ஷன் படமாக மாற்றியிருக்கிறது. நடிப்புடன் இயக்கத்திலும் விஷால் கவனம் ஈர்க்கிறார்.
மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கும் விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குடும்பத்தின் நீண்ட நாள் கனவான கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து பழைய கார் ஒன்றை வாங்குகிறார். அதில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது, மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து துஷாரா விஜயனையும், அவரது மகளையும் சுட்டுக் கொல்கிறது.
மகனுடன் காட்டுக்குள் தப்பிச் செல்லும் விஷால், ஒரு கட்டத்தில் எதிரிகளை வேட்டையாடத் தொடங்குகிறார். இதற்கான காரணத்தை மகன் கேட்கும்போது, தனது தந்தையின் பெயர் ‘லிங்கா’ என்கிறார். விஷால் ஏன் இப்படி மாறினார்? லிங்கா யார்? அவரது கடந்த காலத்துக்கும் தற்போதைய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதற்கான விடைகளே படத்தின் மீதிக்கதை.
தந்தை, மகன் என இரு வேடங்களிலும் விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். டான் கதாபாத்திரத்தில் அதிரடியை வெளிப்படுத்தும் அவர், மகன் கதாபாத்திரத்தில் அமைதியான தோற்றத்துடன் அனுதாபத்தைப் பெறுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் விஷாலின் எனர்ஜி படத்துக்கு பலம் சேர்க்கிறது.
துஷாரா விஜயன் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அஞ்சலி கவனம் ஈர்க்கிறார். ஜான் விஜய் தனது நடிப்பால் தனித்து தெரிகிறார். யோகி பாபு, ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் கதைக்களத்துடன் சிறப்பாக பயணிக்கிறது. பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம். அதேநேரம் சில காட்சிகளின் முடிவுகளை முன்கூட்டியே யூகிக்க முடிவது திரைக்கதையின் சிறிய பலவீனம். தந்தை–மகன் மோதல், பழிவாங்குதல் போன்ற வழக்கமான அம்சங்கள் இருந்தாலும், வித்தியாசமான காட்சிகளையும் அதிரடியான தருணங்களையும் கொண்டு அவற்றை சுவாரஸ்யமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் விஷால்.
குறிப்பாக கிளைமேக்ஸ் திருப்பம் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் விஷால் தனது முத்திரையைப் பதிக்க முயன்றிருக்கும் ஆக்ஷன் படமாக ‘மகுடம்’ அமைந்துள்ளது.
மகுடம் திரை விமர்சனம்
- Rating