காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையை கணவன் தேடும் கதைக்களத்தில் உருவாகி வருகிறது புதிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கருப்பட்டி’.
கொளத்தூர் கிராமத்தில் தனது தாயுடன் வசித்து வரும் கருப்பட்டி, அதே ஊரில் தந்தையுடன் வசிக்கும் பவானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகு பவானியின் ஆவி ஊரில் உள்ளவர்களை அச்சுறுத்தத் தொடங்குகிறது.
இதையடுத்து, தனது மனைவி எப்படி உயிரிழந்தார், அவரை கொலை செய்தது யார் என்பதைக் கண்டறிய கருப்பட்டி களமிறங்குகிறார். இந்த தேடலில் அவருக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் எதிர்கொள்கின்றன. தொடர்ந்து நடைபெறும் மர்மம், திகில் மற்றும் ஆக்ஷன் சம்பவங்களே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளன.
மோனிதா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜயராஜ், சமந்து, ஹரிணிதா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சேலம், மேட்டூர், செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. செந்தில் மாறன் – கவிநாதன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். டி.எஸ். திவாகர் இசையமைப்பதுடன் படத்தொகுப்பையும் கவனிக்கிறார். ஹிஜாஸ் அகமது பாடல்களை எழுதியுள்ளார். ராம் முருகேஷ் நடனப் பயிற்சியையும், ரமேஷ் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
‘காதல்பதிவு’, ‘நந்திவரம்’, ‘சினிமா கனவுகள்’, ‘கொலை தூரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம், ‘கருப்பட்டி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார். இது அவரது ஐந்தாவது படமாகும்.
கருப்பட்டி கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் விஜயராஜ், தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
காதல், மர்மம், திகில் மற்றும் ஆக்ஷன் என பல அம்சங்களுடன் உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.