ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிரடி மற்றும் பரபரப்பான நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் மே 22 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது.
அதிகாரம், செல்வாக்கு மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இப்படம், உண்மைக்காக போராடும் இரு பெண்களின் சக்திவாய்ந்த கதையை பேசுகிறது. சமூகத்தில் வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இரு பெண்கள், சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்ட முயல்வதே கதையின் மையமாக அமைந்துள்ளது.
இப்படத்தை இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
“சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள பொது வழக்கறிஞர் நேஹா ராஜ்வன்ஷ் மற்றும் ஜோதிகா நடித்துள்ள நீதிமன்ற ஸ்டெனோகிராபர் சரிகா ராவத் ஆகிய கதாபாத்திரங்கள் மூலம், அதிகாரம் நிறைந்த உலகில் உண்மை மற்றும் நீதிக்கான போராட்டத்தை திரைப்படம் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.
ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறுகையில், “பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையாக ‘சிஸ்டம்’ உருவாகியுள்ளது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களை ஆழமாக கவரும்” என்றார்.
Baweja Studios தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில், “முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும் இரு பெண்களின் உறுதியான பயணத்தை சொல்லும் விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா இது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இந்த கதையை கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
“சிஸ்டம்” திரைப்படம், இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 22 முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.