அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய், சிவகார்த்திகேயன், பிரபாஸ் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள். இவற்றில் எந்தப் படம் பொங்கல் வின்னராக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பா உள்ளது.
ஜனநாயகன்: அடுத்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் முதன்மையானதாக இப்படம் உள்ளது. காரணம், விஜய் இதனை தனது கடைசிப் படமாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
அவர், தற்போது முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதாலும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதாலும் இயல்பாகவே இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விட்டது.
இப்படம் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டாலும், இதனை ஹெச்.வினோத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார். ஒரே ஒரு க்ளிம்ப்ஸ் தவிர படம் குறித்த எந்த தகவலையும் வெளியாகவிடாமல் படக்குழு தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது.
பராசக்தி: ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன், வில்லனாக ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ளனர்.
படத்தின் டைட்டில், அறிவிப்பு டீசர், நடிகர்கள் தேர்வு என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. தொடர்ந்து ‘அமரன்’, ‘மதராஸி’ என தொடர்ந்து ஹிட் கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இதுவும் ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம், இந்தித் திணிப்புக்கு எதிரான கதைக்களம் என கூறப்படுகிறது.
த ராஜா சாப்: ராஜமவுலியின் ‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் பிரபாஸின் மார்கெட்டை இந்தியா முழுவதும் ஏற்றிவிட்டன. அந்த மார்கெட் மதிப்பை தக்கவைக்க அவரும் தொடர்ந்து பான் இந்தியா கதைகளாக நடித்து வந்தாலும், எதுவும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி அடையவில்லை.
பிரசாந்த் நீலின் ‘சலார்’ மட்டுமே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றாலும் ‘பாகுபலி’யின் ரெக்கார்டை அப்படத்தால் உடைக்க முடியவில்லை. ’கல்கி’ நல்ல வசூல் செய்தாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இந்த சூழலில் தொடர்ந்து சீரியஸ் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த பிரபாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் களத்தில் இறங்கி இருக்கிறார். ட்ரெய்லரிலேயே அவருடைய கதாபாத்திரம் எப்படியானது என்பதை யூகிக்க முடிகிறது.
இவ்வாறு பொங்கலுக்கு மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மூன்று படங்களும் ஒன்றாக மோதுவதால் 2026 பொங்கல் ரசிகர்களுக்கு அதிகளவு தித்திப்பாக அமையும்.