இறுதிப்பக்கம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Insomniac’s Dream Creations நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கியுள்ளார்.

முதல் பாகத்தில் மர்மம், விசாரணை மற்றும் உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் கூடிய திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் பாகத்திலும் விறுவிறுப்பான மர்மத் திரில்லர் கதைக்களத்தைக் கையிலெடுத்துள்ளார். இளம் நடிகர் மணிகண்டன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரத்த வெள்ளத்தில் தலைகீழாகக் கிடக்கும் பெண், அவரைச் சுற்றிச் சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அந்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிறக் கார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பெண்ணைச் சுற்றிப் பரவியிருக்கும் ரத்தம் காரின் பாதையாக நீள்வது, படத்தின் மர்மத்தையும் விசாரணையின் பின்னணியையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

‘இறுதிப்பக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், புதிய கொலை மர்மத்தையும் பரபரப்பான விசாரணையையும் மையமாகக் கொண்ட கதையை எதிர்பார்க்க வைக்கிறது.

- Advertisement -

முதல் பாகம் மர்மம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் புதிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதில் ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பு தீவிரமாக முயற்சி செய்கிறது. அதே நேரத்தில், குற்றவாளிகள் தங்களது குற்றம் வெளியில் தெரியாமல் இருக்க ஆதாரங்களை மறைக்க முயல்கின்றனர். கொலையின் பின்னணியைக் கண்டறிய முயலும் ஒரு தரப்புக்கும், உண்மையை மறைக்கப் போராடும் மற்றொரு தரப்புக்கும் இடையே நடைபெறும் மோதலே இப்படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது.

விசாரணையுடன் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் இணைத்து, அடுத்தடுத்த திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே பார்வையாளர்களைத் தொடக்கம் முதல் இறுதிவரை கதைக்குள் ஈர்க்கும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘குமார சம்பவம்’ தொடர்களின் மூலம் பிரபலமான குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Irudhipakkam 2Irudhipakkam 2 First Look Unveiled by Manikandan