சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகை ப்ரீத்தி முகுந்தன், தற்போது கோலிவுட்டில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாகப் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம், கதைகளைத் தேர்வு செய்யும் விதம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து ப்ரீத்தி முகுந்தன் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வது குறித்துப் பேசிய அவர், “இயக்குநர்கள் என்னிடம் கதையை விவரிக்கும் விதம் மிகவும் முக்கியம். அவர்கள் சொல்லும் விதம் பிடித்திருந்தால், பாதிக் கதை முடிவதற்கு முன்பே அந்தப் படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்துவிடுவேன். குறிப்பாக, கதாநாயகிகளுக்கு கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது இயக்குநர் மீதும், படத்தின் மீதும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தனது ஆரம்பகாலப் படத் தேர்வுகள் குறித்துப் பேசிய அவர், “சினிமாவின் தொடக்கக் காலத்தில் சில கதைகளைச் சரியாகக் கணிக்காமல் தேர்வு செய்திருக்கிறேன். ஆனால், காலப்போக்கில் எனது அனுபவங்களின் மூலம் கதைகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். தற்போது ஒரு இயக்குநரைச் சந்திப்பதற்கு முன்பாகவே அவரது முந்தைய படங்களைப் பார்த்து, இயக்கும் விதத்தையும் அணுகுமுறையையும் கவனிப்பேன். அதன் பிறகு அவர் விவரிக்கும் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்து எனது முடிவை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், படங்களுக்கான ஆடிஷனில் பங்கேற்பது குறித்துப் பேசிய ப்ரீத்தி முகுந்தன், “இதுவரை 10 திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஒரு கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவரா என்பதைத் தெரிந்துகொள்ள ஆடிஷன் நடத்துவது இயல்பான ஒன்றுதான். நான் முன்னணி கதாநாயகியாக இருப்பதால் ஆடிஷனில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை. இன்றைய சினிமா மிகவும் தொழில்முறையாக மாறிவிட்டது. தற்போது நான் நடித்துவரும் தனுஷ் படத்திற்குக்கூட முறையாக ஆடிஷன் செய்த பிறகுதான் தேர்வு செய்யப்பட்டேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வரும் ப்ரீத்தி முகுந்தன், தனுஷ் படத்திற்கும் ஆடிஷன் மூலம் தேர்வானதாகக் கூறியிருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது. கதாபாத்திரத்திற்கான பொருத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், தனது படத் தேர்வுகளிலும் தொழில்முறை அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவது அவரது சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது.