நடிகர் சங்கத்தேர்தல் தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தபோது, நம்பிராஜன் தரப்பில், ‘பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்துக்கும் விரோதமானது. நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிடப்பட்டது.

மேலும், ‘உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடிகர் சங்கத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும்’ எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில், ‘தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என கருதி, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், ‘பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோதும், வழக்குகள் காரணமாக 2022-ம் ஆண்டு தான் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்’ என்றும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதங்களுக்காக, விசாரணை செப்டம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

high court questions over nadigar sangam election dispute
actor vishalcourt ordernadigar sangamநீதிமன்றம்விசாரணை