125 நாட்களைக் கடந்து வரவேற்பைப் பெறும் ‘ஹபீபி’! படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான படைப்பாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் இப்படம், தென் தமிழக முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலுடன் தொடர்புடைய வாழ்க்கை மாற்றங்களைப் பதிவு செய்துள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை இயல்பாகச் சித்தரித்துள்ள இப்படம், அதன் கதைக்களம் மற்றும் கலாசாரப் பதிவுகளுக்காகக் கவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் 125 நாட்களைக் கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி, படக்குழுவினரைப் பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் படத்தின் சிறப்புத் திரையிடலும் இடம்பெற்றது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டினர்.

கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி பேசுகையில், “‘ஹபீபி’ ஒரு காவியத்தைப் போன்ற படைப்பு. இத்தகைய திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்திற்குப் பாராட்டு விழா நடத்துவது பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற படைப்புகளுக்கு இன்னும் அதிகமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

“இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான பிம்பங்களைத் தாண்டி, அவர்களின் உண்மையான வாழ்வியலையும் அன்பையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் சகோதரர்களாகவும் தமிழர்களாகவும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதையே இப்படம் உணர்த்துகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

பத்திரிகையாளரும் இயக்குநருமான கோடங்கி பேசுகையில், “இது ஆடம்பரமான விழா அல்ல; ஆனால் அற்புதமான, அழகான விழா. ‘ஹபீபி’ போன்ற படைப்புகளை நாம் எந்த அளவுக்குக் கொண்டாடுகிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மீரா கதிரவன் சொல்லியிருப்பது அன்பு. அன்புக்கு மதம், ஜாதி, மொழி கிடையாது. ஆனால் அந்த அன்பு வெற்றி பெறுவதற்குப் பல நேரங்களில் போராட வேண்டியுள்ளது.

“இந்தப் படத்தை இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் நோக்கத்தையும் உழைப்பையும் உணர முடிகிறது. குறிப்பாக, கஸ்தூரி ராஜா தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

“தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டில் உருவாகும் பல திரைப்படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. நல்ல படைப்புகளை உருவாக்குபவர்களை அவர்கள் இருக்கும்போதே பாராட்ட வேண்டும். வணிக வெற்றி முக்கியமானதுதான்; அதே நேரத்தில் உணர்வுபூர்வமான படைப்புகளையும் கொண்டாட வேண்டும். இஸ்லாமியர்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படங்களுக்கும் மற்ற படங்களுக்கு இணையான கவனமும் ஆதரவும் கிடைக்க வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கோவை இப்ராஹிம் பேசுகையில், “‘ஹபீபி’ படக்குழுவினர், இயக்குநர் மீரா கதிரவன், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். எங்களுடைய திரைப்படத்தைக் கொண்டாடிப் பாராட்டி வரும் கில்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. எங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் அவசியம். இந்த அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. விரைவில் எங்களுடைய அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புடன் சந்திக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சாகுல் ஹமீத் பேசுகையில், “நேசம் என்டர்டெயின்மென்ட் சார்பில் இதற்கு முன்பு ‘டூலெட்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடியிருக்கிறோம். நல்ல படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் நோக்கம்.

- Advertisement -

“‘ஹபீபி’ இயக்குநர் மீரா கதிரவனின் நீண்டகாலக் கனவு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது அர்ப்பணிப்பின் விளைவாக இன்று ஒரு சிறந்த படைப்பைக் கொண்டாடுகிறோம். இப்படம் உலகின் பல இடங்களில் திரையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

“குறைந்த முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதே பெரும் சவாலாக உள்ளது. ‘ஹபீபி’ நான்கு வாரங்கள் திரையரங்குகளில் ஓடியது. இருப்பினும், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தைத் திரையிடக் கோரிக்கைகள் வந்தபோதும், அடுத்தடுத்த பெரிய படங்களின் வெளியீடுகளால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியவில்லை. சிறிய படங்களுக்கும் உரிய திரையரங்குகளும் வெளியீட்டு வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதிசெய்யத் திரைப்படத் துறை சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நடிகர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “‘ஹபீபி’ படத்திற்காகக் கிட்டத்தட்ட 40 முதல் 50 பாராட்டு மேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். பல இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறோம். இன்றுவரை தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் காரணம் இயக்குநர் மீரா கதிரவனின் பார்வையும் வழிகாட்டுதலும்தான்.

“கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன். 25 படங்களை இயக்கிய அனுபவத்தில் சொல்கிறேன்; ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு அசைவிலும் இயக்குநரின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆரம்பத்தில் எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. ஆனால், மீரா கதிரவன் கொடுத்த திரைக்கதையைப் படித்தபோது, அதில் இருக்கும் சிறப்பைப் புரிந்துகொண்டேன். இந்தப் படம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

“இந்தப் படத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட்டோம். இயக்குநர் என்னை நடிக்க அழைத்தபோது தயக்கம் இருந்தது. ஆனால், அவரது அணுகுமுறையும் கதையின் தன்மையும் என்னைச் சம்மதிக்க வைத்தன. இந்தப் படம் மீண்டும் எனக்கு ‘கஸ்தூரி ராஜா’ என்ற பெயரையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இத்தகைய படங்களைத் தொடர்ந்து உருவாக்கவும், என்னை மீண்டும் நடிக்க அழைக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்” என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், “‘ஹபீபி’ திரைப்படத்துக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாராட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. உலகம் முழுவதும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதற்கு முன்பு எழுத்தாளர்கள், மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். தற்போது தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

“தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் என்னுடைய கதை வெறும் காகிதத்தில்தான் இருந்திருக்கும். அவர்களிடமிருந்து கிடைக்கும் இந்த ஊக்கமும் அங்கீகாரமும் தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இப்படத்தில் நடித்த கஸ்தூரி ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினர். மாளவிகா மனோஜ், தனஸ்ரீ உள்ளிட்ட பலருக்கும் இந்தப் படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி.

“தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன. கொங்கு மக்களின் வாழ்க்கை, கரிசல் நிலத்தின் வாழ்க்கை, வடசென்னையின் வாழ்க்கை எனப் பல்வேறு கதைகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம்தான் ‘ஹபீபி’.

“இஸ்லாமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்கியதில் வி.எஸ். முஹம்மத் அமீனின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரை இயக்குநர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர் என்று மட்டும் குறிப்பிட முடியாது; இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியுள்ளார். அவர் இல்லையென்றால் ‘ஹபீபி’ இந்த நிலையை அடைந்திருக்காது. இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியல், கலாசாரம் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட ‘ஹபீபி’ திரைப்படத்தின் பயணத்தையும், அதன் உருவாக்கத்தில் படக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

HabibiHabibi Celebrates 125 Days Filmmakers Honoured at Special Event in Chennai