தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார், திரைப்படப் பணிகளுடன் புதிய இசைப் படைப்புகளையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். தனது சொந்த இசை நிறுவனத்தின் வாயிலாக திறமையான இசைக் கலைஞர்களின் படைப்புகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று வரும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
- Advertisement -
இப்படத்தின் முதல் பாடலான ‘கடலாடும்’ ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இசைத் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தோணி தாசனின் குரலில், உணர்வுப்பூர்வமான வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
‘என்ன விலை’ திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற மேன்ஹெய்ம் ஆர்ட் அண்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது.
மேலும், இஸ்தான்புல்லில் நடைபெற்ற கயா சர்வதேச திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அட்லாண்டா இந்திய திரைப்பட விழா ஆகியவற்றிலும் இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.
நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தை நிறைவு செய்யும் முக்கியமான தருணத்தில் வெளியாகும் இப்படத்தில், நிமிஷா சஜயனின் நடிப்பும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல் மற்றும் இசை அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.