துல்கர் சல்மானின் I Am Game படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “I Am Game” படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 11 மாதங்கள் நீடித்த இந்த படப்பிடிப்பு, மொத்தம் 156 நாட்களில் தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

“RDX” படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பாக பார்க்கப்படுகிறது.

Wayfarer Films நிறுவனம் வழங்கும் இந்த படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து கதையை எழுதியுள்ளனர்.

“I Am Game” திரைப்படம், துல்கர் சல்மானின் 40வது படமாகும். இதில் அவர் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் இந்த படம், பான்-இந்தியா அளவில் மிகப்பெரிய வெளியீடாக உருவாகிறது.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்த படத்திற்கு, அன்பறிவ் மாஸ்டர்கள் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சமன் சாக்கோ எடிட்டிங் பொறுப்பை வகித்துள்ளார்.

முன்னதாக வெளியான முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், “I Am Game” திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

Dulquer SalmaanI Am Gameதுல்கர் சல்மான்