இந்த ஆண்டின் தீபாவளி பந்தயத்தில் 3 முக்கிய படங்கள் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’ ஆகும். இப்படங்கள் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.
டியூட்: இயக்குநராக ‘கோமாளி’ படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அதன்பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் இளசுகளின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகி விட்டார். முந்தைய இரண்டு படங்களும் பெற்ற பிளாக்பஸ்டர் வெற்றியின் காரணமாக ‘டியூட்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு ரிலீஸுக்கு ஒருமாதம் முன்பே ப்ரொமோஷனையும் தொடங்கியது படக்குழு. முந்தைய இரண்டு படங்களைப் போலவே திரைக்கதை இருந்துவிட்டால் இந்தப் படம் பிரதீப்புக்கு ஹாட்ரிக் வெற்றிதான்.
பைசன்: யார் ஹீரோவாக நடித்தாலும் மாரி செல்வராஜ் படங்களுக்கு என்று எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தன் கதைகளின் வழியே தொடர்ந்து சொல்லி வரும் அவரது படைப்புகள் இதுவரை ஏமாற்றியதில்லை. அவ்வகையில் துருவ் ஹீரோவாக நடித்த இந்த படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொதுவாக, எவ்வளவு விளம்பரம் செய்தாலும் படத்தின் கன்டென்ட் தரமாக அமைந்து விட்டால் வெற்றி உறுதியாக விடும்.
டீசல்: ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் ஹரிஷ் கல்யாண் களமிறங்கியுள்ள படம் இது. இப்படத்துக்கும் பெரியளவில் விளம்பரங்கள் இல்லையென்றாலும் இதன் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் அமைந்துள்ளது. ‘லப்பர் பந்து’ போல திரைக்கதையும் சுவாரஸ்யம் குறையாமல் இருந்தால் வசூலிலும் சாதனைதான்.
இந்த மூன்று படங்களைத் தவிர நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘கம்பி கட்ற கதை’, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகின்றன. ஆனால், மேலே குறிப்பிட்ட 3 படங்களே எதிர்பார்க்கப்படும் படங்களாக தீபாவளி பந்தயத்தில் உள்ளன. முந்தப்போவது எந்தப் படம் என பொறுத்திருந்து பார்ப்போம்.