ஒரு கலைஞரின் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமே அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம், திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் மனநிறைவையும் அளித்துள்ளது. இப்படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகள் அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜீவா சுப்பிரமணியம், ‘டோரதி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார். தனது நடிப்பைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் அன்புடன் கொண்டாடுவதும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ஜீவா சுப்பிரமணியம், “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அந்த அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் மேடம் ஆகியோர் எங்கு சென்றாலும் என்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். என்னை ‘ஜீவா அக்கா’ என்று அன்போடு அழைக்கிறார்கள். அவர்களின் அன்பும் ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன. இந்த மகிழ்ச்சி, இன்னும் பத்து ஆண்டுகள் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை எனக்குக் கொடுத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- Advertisement -
இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துள்ள ஜீவா சுப்பிரமணியம், ‘ஆக்கம்’, ‘தாரை தப்பட்டை’, ‘தர்மதுரை’, ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘சுழல்’, ‘கையும் களவும்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ‘டோரதி’ படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ஹைதராபாத், பெங்களூரு, கேரளா மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வரும் தனக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘டோரதி’ படத்தின் மூலம் கிடைத்துள்ள வரவேற்பு, தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு திரைப்பயணத்தில் முன்னேறுவதற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக ஜீவா கூறியுள்ளார். மேலும், தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது இயக்கக் குழுவைச் சேர்ந்த விக்கி, கீர்த்தி, ஸ்ரீனிவாசன், பரத் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தான் மதிக்கும் நபர்களிடமிருந்து கிடைத்த அன்பும் அங்கீகாரமும் தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தை மிகவும் பொக்கிஷமானதாக மாற்றியுள்ளதாக ஜீவா சுப்பிரமணியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.