காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தை கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் ‘சைக்கிள் கேப்’!
டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் புதிய மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படமான ‘சைக்கிள் கேப்’, காதல், இசை மற்றும் உணர்வுகளின் கலவையுடன் உருவாகி வருகிறது. இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கும் இப்படத்தில் நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மியூசிக்கல் காதல் கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘சிந்து பைரவி’, ‘முகவரி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் கவனம் பெற்ற ‘லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டின் ‘ஆஷிகி 2’, ‘சயாரா’ போன்ற படங்கள் வரை, இசை மற்றும் காதலை மையப்படுத்திய படங்கள் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. அதேபோன்ற உணர்வுகளை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற நவீன இசை மற்றும் முக்கோண காதல் கதையுடன் சொல்ல வருகிறது ‘சைக்கிள் கேப்’.
இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களின் தாக்கத்தில் தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கிய இயக்குநர் எம்.ஆர். பாரதி, தனது முந்தைய படைப்புகளின் மூலம் உணர்வுப்பூர்வமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளார். விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ‘அழியாத கோலங்கள் 2’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘ட்ரீம் கேர்ள்’ மூலம் காதல் மற்றும் நினைவுகளை மையப்படுத்திய கதையையும் அவர் வழங்கியிருந்தார். தற்போது ‘சைக்கிள் கேப்’ மூலம் இளமைத் துள்ளலான இசை காதல் கதையை உருவாக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி கூறுகையில், “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உள்ளது. உறவுகளை மையப்படுத்திய கதையாக ‘சைக்கிள் கேப்’ உருவாகியுள்ளது. கதாபாத்திரங்களுக்கிடையே இசை ஒரு பாலமாக இருக்கும். நவீன காட்சியமைப்புகளுடன், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் இப்படத்தில் இடம்பெறும்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் கூறுகையில், “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும். அந்த உணர்வை மனதில் வைத்தே ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் எப்போதும் நிஜத்தன்மையும் கவித்துவமும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதையே அனுபவிப்பார்கள். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இசை, காட்சியழகு மற்றும் இளமை உணர்வுகள் நிறைந்த திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொழில்நுட்பக் குழு:
இசை – சதீஷ் பத்மநாபன் (அறிமுகம்)
பாடகர்கள் – நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன், கௌஷிக் ஸ்ரீதரன்
நிர்வாக தயாரிப்பாளர் – சுஜா சூர்யா நிலா
ஒளிப்பதிவு – சாலமன் போஸ் டி.எஸ்.
படத்தொகுப்பு – சரவண எட்டயஞானம்
வசனம் – ஹேமந்த் செல்வராஜ்